News Update :
Home » » தொடர்ந்தும் மலையக மக்களை ஏமாற்ற நினைக்கும் தொழிற்சங்கங்கள்!

தொடர்ந்தும் மலையக மக்களை ஏமாற்ற நினைக்கும் தொழிற்சங்கங்கள்!

Penulis : Unknown on ஞாயிறு, 2 மார்ச், 2014 | ஞாயிறு, மார்ச் 02, 2014

மலையக மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட இன்னமும் பூர்த்தி செய்யாத மலையக தொழிற்சங்க, அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் நம் மக்களை ஏமாற்ற நினைப்பது கொடுமையிலும் கொடுமை.
அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் கூட்டு ஒப்பந்தம் என்ற போர்வையில் சில்லறைகளை சம்பள உயர்வு என்ற பேரில் பெற்றுக் கொடுத்து விட்டு, இரவோடிரவாக வெளிநாட்டுக்குச் சென்ற தலைமைத்துவங்களும், எங்கே சிறிய ஓட்டையொன்று கிடைக்கும் மூக்கை நுளைக்கலாம் என தருணம் பார்க்கும் தலைமைத்துவங்களும் மலையக மக்களின் சாபக்கேடுகள்.
கொட்டகலையில் நடைப்பெற்ற மலையக தொழிற்சங்க கூட்டமைபின் ஆர்ப்பாட்டத்தை தாம் குழப்பவில்லை. சம்பள உயர்வில் திருப்தியடைந்த தொழிலாளர்களே போலிப் போராட்டங்களைக் குழப்பினர், என மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கூறியிருக்கிறார்.
இது, அவர் மலையக தொழிற்சங்க, அரசியல் வரலாற்றுகளை மறந்து பேசுகிறாரா? அல்லது மறைத்துப் பேசுகிறாரா? என தெரியவில்லை.
1983 ஆடிக்கலவரத்தின் போது தம் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தம் குடும்பத்தாருடன் தமிழகம் ஓடி எல்லாம் முடிந்த பின் மெள்ள வந்து வீரம் பேசியவர்களா நம் தலைவர்கள்?.
மலையக அரசியலில் பேரம் பேசும் சக்திகள் என தம்மைத் தாமே மார்தட்டிக் கொள்ளும் இவர்கள் எதை சாதித்தார்கள்?.
பதவிகள் எத்தனை? பெட்டிகள் எத்தனை? என்பதில் தானே பேரம் பேசியிருக்கிறார்கள்?.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில் மலையக அரசியல்,தொழிற்சங்கவாதிகள் 99 சதவீதமானோர் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான்.
வசதி வாய்ப்புகள் வந்தவுடன் தம்மினத்தை தம் சமுதாயத்தை மறப்பவர்கள் தானே அதிகம்?.
தேர்தல் காலத்தில் அற்ப சலுகைகளைக் காட்டி வாக்குக்களை வாரிக் கொள்ளலாம் என்பது இவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
இவர்களை மட்டும் குற்றம் சொல்லி என்ன பிரயோசனம் மாற்றத்தை விரும்பாத மக்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டுதானிருப்பார்கள்.
சரியான மாற்றுத் தலைமை ஒன்று உருவாகாத வரையில் மலையகத்துக்கு விடிவில்லை.

S.ரவிந்திரன்.
செயலாளர்
புதிய மலையகம்
Share this article :

கருத்துரையிடுக