News Update :
Home » » கவிஞர் கலாஜோதி குமார இராமநாதனின் "சாரல்"

கவிஞர் கலாஜோதி குமார இராமநாதனின் "சாரல்"

Penulis : Unknown on ஞாயிறு, 2 மார்ச், 2014 | ஞாயிறு, மார்ச் 02, 2014




புஸல்லாவ சோகம தோட்டத்தில் தோட்ட அதிகாரியாக தொழில் புரிந்த திரு.கோட்டபுரி வேலு புலிக்குட்டி குமாரவேலுவிற்கும். பொட்டம்மாவிற்கும் 1943.10.04 ஆந் திகதி இராமநாதன் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை புஸல்லாவ சரஸ்வதி வித்தியாலயத்திலும், பின்னர் லூனுவத்த ரஹூப்பொல வித்தியாலயத்திலும், இறுதியாக பண்டாரவளை அர்ச் சூசையப்பர் கல்லூரியிலும்(st.josep college ) கல்வியை தொடர்ந்த இவர் தான் கல்வி கற்ற பண்டாரவளை அர்ச் சூசையப்பர் கல்லூரியிலேயே ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் ஒரு கலை பட்டதாரியாவார். பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்திலும் (சென் மேரிஸ் என்றிருந்த பெயரை பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயம் என்று பெயர்மாற்றி பாடசாலைக்கான இலச்சினை,கீதம் என்ப வற்றை அமைத்தவரும் இவரே) கொஸ்லாந்தை த.ம.வி, ஹப்புதலை தமிழ் மகாவித்தியாலயம் போன்ற   பாடசாலைகளில் அதிபராக, கொத்தணி அதிபராக பணியாற்றி இறுதியாக இவ்வுலகை விட்டு நீங்கும் வரை ஊவா மாகாண தமிழ் கல்வி பணிப்பாளராக சேவையாற்றினார். இந்து கலாசார திணைக்களத்தின் அறநெறி பாடசாலைகளுக்கான அறநெறி கீதத்தை இயற்றியவரும் இவரே. இலக்கிய, சமூக சேவைகளுக்காக பல்வேறு அமைப்புகள் பல பட்டங்களை வழங்கியிருக்கின்றன. இந்து கலாசார திணைக்களம் கலாஜோதி விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
  சிறுவயது முதல் மலையக மாந்தரின் அவல வாழ்க்கையை கண்ணுற்று வருந்திவந்த இவர், இவர்களுக்கு மீட்பு இல்லையோ என ஏங்கியிருக்கிறார். இதன் வெளிப்பாடாகவே இவரின் கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள் எல்லாம் மலையக மக்களின் வாழ்வியலை பின்னிபிணைந்ததாகவே இருந்திருக்கிறது. இவர் பாடாத தலைப்புகளே இல்லை. ஆனால் இவரின் படைப்புகள் இவரின் வாழ்நாளில் நூலுருவாக வெளிவராமை கவலையளிக்கும் விடயமே. சாரல்எனும் இவரின் கவிதை நூலில் உள்ள கவிதைகளை விட அச்சிலேறாத மூலக்கவிதைகள் ஏராளமாக இருக்கின்றன. அக்கவிதைகளை நூலுருவில் கொண்டுவர இயலுமாயின், அதுவே நாம் அவருக்கும், நம்சமூகத்துக்கும் செய்யும் சேவையாகும்.

எங்கள் அன்னை
ஒன்றும் புரியாமல் உலகம் தெரியாமல்
இன்றுவரை வாழ்ந்துவிட்டார் எங்கள் அன்னையர்!

தொன்று தொட்டு விடியலிலே
துயிலெழுந்து சமைத்து வைத்து-
குன்றுமலை ஏறி என்றும்
கொழுந்துகள் பறித்தெடுத்து
அந்தியிலே வீடு வந்து
அரவணைத்து குழந்தைகளை
சொந்தமுள்ள கணவனுக்கும்
சுகந்தருவாள் எங்களன்னை!

மாலையிலே நாடு சென்று
வருங்கணவன் பார்த்திருந்து
போதையிலே அவனுதைத்தால்
பேதை கண்ணீர் வடித்து
மீதி நகை கொடுக்கும் பெண்மை
மேதினியில் எங்கேயுண்டு?
காலையிலே எழுந்து மீண்டும்
கடமைக்குச் சென்றிடுவாள் ! _ எங்களன்னை

கங்காணிமார் தொடங்கியங்கே
கறுப்புதுரைமார்கள் வரை
“செங்கோல்கள்” செழுத்துந் தோட்டம்
தேயிலையே அவளின் உலகம்,
தானறியாக் கல்விதனை
தன் மகற்குக் கொடுங்கள் என
மேமலைகள் ஏறிநெற்றி
வியர்வையைச் சிந்திடுவாள்!

இந்தியாவில் வாழ்ந்த கதை
எங்கள் பாட்டன் வந்தகதை
ஆயிரம் கதைகளம்மா
அன்னையவள் தாலாட்டில்
அவள் பறிக்கும் தேயிலையால்
அவனியெங்கும் மாளிகைகள்
அன்னையவள் உறங்குவதோ
இன்றுமின்னும் லயத்தினிலே !
எங்களன்னை! எங்களன்னை!

_ கலாஜோதி கவிஞர் குமார இராமநாதன்









Share this article :

கருத்துரையிடுக