மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சம்பள பிரச்சினை காலத்துக்கு காலம் ஏகாதிபத்திய வாதிகளின் கையில் சிக்கி தனி தீர்மானம் எடுக்கப்படுகின்றது அதனை தட்டிக்கேட்ப்பவர்கள் தொழிலாள துரோகிகளாகவும்,காட்டிக்கொடுப்பவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். இதனை நாம் கடந்த 21.04.2013 அன்று மலையக தொழிற்சங்க கூட்டு சம்மேளனம் கொட்டகலையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
’’மலையக மக்களின் பிரச்சினைகளை, அவர்சார் நலன்களை சமூக அக்கரையுள்ள எவரும் தட்டிக்கேட்கலாம்’’என்ற அடிப்படையில் எமது அமைப்பு, மலையக மக்களின்,தொழிலாளர்களின் பிரச்சினைகளை,சம்பள உயர்வு நாடகத்தை மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமொன்றை இன்று 28.04.2013 அன்று நுவரெலியா மாநகர சபை திறந்த வெளியரங்கில் ஒழுங்கமைத்து நடாத்தியது.
மலையக நலனில் அக்கரையுள்ள பல கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தப்போதும், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவரும்,நாடாளுமன்ற உருப்பினருமான வீ.எஸ்.ராதாகிருஷ்ணன், செயலாளர் .அ.லோரன்ஸ், அக்கட்சி பிரதிநிதிகள்,
மனோகணேசனின், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள், மத குருமார்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துரைகளை வழங்கினர்.
சாத்வீக ரீதியான இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை குழப்பும் நோக்கில் அமைச்சர் ஆறுமுகனின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர்களும், அடியாட்களும் உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்தைச் சுற்றி சுற்றி வாகன அணியில் வலம் வந்துகொண்டிருந்தனர். ஆயினும் பொலிஸாரினதும்,விஷேட அதிரடிப்படையினரினதும் பலத்த பாதுகாவல் இருந்தப்படியால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் உண்ணாவிரதம் முடிவுற்றவுடன் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உருப்பினரும்,ஆசிரியருமான முரளி என்பவரையும் அவரது நண்பரையும் பஸ் தரிப்பிடத்தில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடியாட்கள் 20 பேர் தாக்கியதில் மார்பில் அடிப்பட்ட நிலையில் ஆசிரியர் முரளி நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நுவரெலியா காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மக்கள் விழிப்படைந்து விட்டால் எங்கே தங்கள் அரசியல் வியாபாரம் விலைபோகப்போகிறது என்ற பயம் இவர்களை ஆட்டிப்படைக்கின்றது. மக்கள் விழித்துக்கொள்ளாதவரை இத்தகையோருக்கு கொண்டாட்டம் தான்.
S.ரவிந்திரன்.
செயலாளர்
கருத்துரையிடுக